Friday 8 April 2011

நேர்காணல்

 

”தேசிய கட்சியின் நலனை மறந்தவர்கள் தனிவழி தேடுவர்” என திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளரும் தமிழக நிதியமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் கூறியுள்ளார்.  60 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். அண்ணா தலைமையில் 1949-ம் ஆண்டு தி.மு.க.வை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர்.
33 ஆண்டுகளாக தி.மு.க. பொதுச்செயலாளராக கலைஞரின் கட்சிப்பணி என்கிற சுமையை பகிர்ந்து வருகிறார்.  தனித்தமிழ் ஆர்வத்தால் ராமையா என்கிற தன் இயற்பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டவர். அவர் பேட்டி:
கேள்வி: முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தல் களத்தில் வேலைகளை தொடங்கிவிட்டது. தி.மு.க. தயாராகிவிட்டதா?
தி.மு.க எபோழுதும், எந்த நேரத்திலும் தேர்தலில் ஈடுபடக் கூடியதாகவே செயல்பட்டு வருகிறது. அது நாளும் இயங்கிக் கொண்டுள்ளதால் தேர்தல் பணியையும் அதே போக்கில் அது மேற்கொள்ளும். தேர்தல் அறிவிக்கப்பட்டால் தேர்தலுக்கான சில சடங்குகள்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவுங்கூட அமைப்பு ரீதியாக இயங்கும் கழகத்திற்கு கடினமானதல்ல.
ஆனால் நீண்ட ஓய்விலோ, செயலற்ற நிலையிலோ, உறக்கத்தில் இருக்கக் கூடிய கட்சி, தேர்தல் வேலையைத் தொடங்கும்போது தான் அது காண்பவருக்கு வேகமான செயல்போலத் தெரியும். ஓட்டப் பந்தயம் போன்ற தேர்தலில் ஈடுபடும் எவரும், புறப்பட்டவுடன் திடீரென்று வேகமாக ஓடிவிட முடியாது.
எந்த கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும், அந்தக் கட்சி ஆட்சியினை மக்கள் வெறுப்பதற்கோ, அன்றி அதை எதிர்க்கும் கட்சித் தலைமையில் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கோ, போதுமான காரணம் இருந்தால்தான் ஆட்சி மாற்றம் நிகழும். மக்கள் ஒரு ஆட்சியை வெறுத்தால்தான் மாற்றம் வரும்.
அந்த வகையில் தி.மு.கழக ஆட்சியில் கலைஞர் நிறைவேற்றியுள்ள சாதனைகள், தமிழ்நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் ஏதேனும் ஒருவகையில் தொட்டிருக்கிறது. அரிசிச் சோறு சாப்பிடுவோர் எவரும், ஆடை உடுத்துவோர் அனைவரும், வாழும் ஆசை கொண்டோரும், மக்களைப் பெற்றோரும் ஆகிய எல்லோரும் இந்த அரசுசெய்துவரும் சமூகநலத் திட்டங்கள் பலவும் தொடர்ந்திட வேண்டும் என்றுதான் விரும்புவர். அப்படித் தொடரச் செய்வதற்கு, யார் இன்று ஆள்கின்றார்களோ அவர்கள் ஆட்சிதான் தொடர வேண்டும் என்று தான் விரும்புவர்.
எதிர்த்து நிற்கும் கட்சியின் கடந்த கால சாதனை எப்படிப்பட்டது என்பதையும் மக்கள் மறந்துவிடமாட்டார்கள். நினைவு ஆற்றல் இழக்காத எவரும், அந்த ஆட்சியில் நடைபெற்ற அராஜக, சட்டவிரோத நடவடிக்கைகளை மறந்திருக்க மாட்டார்கள். நினைத்தாலும், கனவிலே கண்டாலுங்கூட கதிகலங்கச் செய்யும் அப்படிப்பட்ட தலைமையை ஆதரித்திடும் அளவு, மனங்குழம்பியோராக இல்லை மக்கள்.
கேள்வி: உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தரப்பில் அடிக்கடி கூட்டணி குறித்த எதிர்ப்புக் குரல்களை கேட்கிறோம். சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடருமா?
வெளியில் பொதுக்கூட்டத்தில் கேட்கும் எதிர்ப்புக் குரலோ அல்லது அறைகூவலோ எதுவாயினும், அந்தக் கட்சியில் அவர்கள் இருப்பதை மேலிடம் கவனிக்க வேண்டும் என்பதற்காகத்தான். வேறு நோக்கமெனில், தங்களுடைய கட்சிக்குள், தங்கள் தேசியக் கட்சியின் ஒட்டுமொத்த நலனை மறந்தவர்கள்தான்… தனி வழி தேடுவார்கள். சிலருக்கு அதுவே அவர்தம் பாரம்பரிய மரபுரிமையாகவும் இருக்கலாம்.
கேள்வி: அரசியல் என்பது வியாபாரம் தான் என்றும், பெரிய கட்சிகள்தான் அரசியலை வியாபாரம் ஆக்கியது என்றும் குற்றம் சாட்டுகிறார் டாக்டர் ராமதாஸ். இதை நீங்கள் ஏற்கிறீர்களா?
அரசியலில் வியாபாரமும் இருக்கலாம். அரசியல் முழுவதுமே வியாபாரம் அல்ல. அப்படி நடத்தினால் அது நீடிக்காது. பெரிய கட்சிகள் வியாபாரம் ஆக்கி இருந்தால் அப்படிப்பட்ட கடும் குற்றம் செய்த கட்சிகளுடன் கூட்டு சேர மாட்டார் டாக்டர் ராமதாசு என்று கருதுகிறேன். ஒருவேளை அவர் கூட்டு சேர்ந்தால், இது எப்படி? வியாபாரம் ஆகாதா, என்று எவராவது கேட்டால், இது சில்லரை வியாபாரம் என்றும் அவர் கூறலாம்.
கேள்வி: அன்புமணி ராமதாசுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக நம்பவைத்து கழுத்தறுத்து விட்டார் கலைஞர் என்கிறாரே ராமதாஸ்?
கலைஞர், அன்புமணி ராமதாசுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக ஒப்புக்கொண்டு கொடுத்த கடிதத்தின்படி, அந்த நாள், இன்னும் வரவில்லை. அதில் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும், யாரும் நம்பிக்கை துரோகம் செய்ய இடமில்லாமல் வரும் சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின் வருகிற ராஜ்யசபா இடந்தான் அவருக்குத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கட்சித் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் பதவி எதையும் எங்கள் குடும்பத்தில் உள்ள எவரும், எப்போதுமே ஏற்கமாட்டோம் என்பது உறுதி; தவறினால் எங்கேயோ நிறுத்தி, எதனாலோ, எவர் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்றவருக்கு, இது எப்படி ஏமாற்றம் ஆகலாம்?
கேள்வி: பொதுவாக இன்றைக்கு கொள்கைப் பிடிப்போடு அரசியலுக்கு வருபவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனரே, ஏன்?
இன்று திராவிடர் கழகம் போன்று அரசியலில் ஈடுபடாதா இயக்கத்தைத் தவிர்த்து, கட்சி எதுவானாலும் அரசியலில் பங்கேற்க வேண்டிய நிலையே உள்ளது. அரசியல் என்பது கட்சிகளின் போட்டி அடிப்படையிலான அரசியலாகவும், அது ஒன்றை ஒன்று வெல்லவும், வீழ்த்தவும் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் உள்ளதால் தனிப்பட்டதொரு இயக்கத்தின் மூலக்கொள்கை உணர்வு ஏற்படுத்தும் நோக்கம் முக்கியத்துவம் பெறவில்லை.
சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, ஆட்சி அமைப்பில் மகளிருக்கு உரிய இடம், சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சியினர் இடம்பொறும் வாய்ப்பு ஆகியவையே இளைஞர்களின் கவனத்தில் இடம்பெறுகின்றன. இதுவும் அனைத்துக் கட்சியினருக்கும் பொதுவானதொரு நிலையே.
ஜனநாயக நடைமுறையில், உள்ளாட்சி மன்றங்களிலோ, நாடாளும் அமைப்புகளிலோ, பல்லாயிரம் பேர் பதவிகளில் உள்ளதைக் காணும் இளைஞர்கள், அந்தப் பதவிகளை அடைவதுதான் அரசியலில் பங்கேற்கும் வாயில் என்று மயங்குகின்றனர்.
பள்ளி அல்லது கல்லூரி மாணவன் ஒருவன் தனது ஆசிரியரைப் பார்த்து, அவரைப் போல தானும் ஓர் ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்படுவதை ஒத்ததே அது. என்றாலும் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை முன் எடுத்துச் செல்லும் வாய்ப்பும், தேவையும் குறைகின்றது. இவ்வாறு பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment