Friday 8 April 2011

தொல்காப்பிய உரை இடைச்செருகல்களைக் களைய வேண்டும்

சென்னை புத்தகக்காட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மெய்யப்பன் பதிப்பகம் பதிப்பித்த 81 நூல்களை நிதி அமைச்சர் க. அன்பழகன் வெளியிட முதல்
சென்னை, ஜன.2: தொல்காப்பிய உரைகளில் காணப்படும் இடைச்செருகல்களைக் களைந்து புதிய உரையை எழுத தமிழறிஞர்கள் முன்வர வேண்டும் என நிதி அமைச்சர் க. அன்பழகன் வலியுறுத்தினார்.சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மெய்யப்பன் பதிப்பகத்தில் தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் பதிப்பித்த 81 நூல்கள் வெளியிடப்பட்டன.நூல்களை நிதி அமைச்சர் க. அன்பழகன் வெளியிட முதல் பிரதிகளை தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார்.விழாவில் க. அன்பழகன் பேசியது:திருவனந்தபுரத்தில் ச.வே. சுப்பிரமணியன் ஆரம்பித்த திராவிட மொழியியல் ஆராய்ச்சி நிறுவனமே தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், ஆந்திரத்தில் திராவிட மொழியியல் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக அமைந்தது.இலக்கியங்கள் அதிகமாக உள்ள மொழிக்கு மட்டுமே இலக்கண நூல் எழுத முடியும் என்ற அடிப்படையில் பார்த்தால் தொல்காப்பியம் கி.மு. 500}ல் வந்ததாக கூறப்படுகிறது. அப்படியானால், அதற்கு 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் செழுமையான இலக்கியங்கள் தமிழில் இருந்திருக்க வேண்டும்.இத்தகைய செழுமையான இலக்கியங்கள் உருவாக வேண்டுமானால் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் அதிக மக்களால் பேசப்பட்டிருக்க வேண்டும்.   அவ்வாறு பேசப்பட்டிருக்க வேண்டுமானால் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழி உருவாகியிருக்க வேண்டும்.திருக்குறள் மட்டுமே உலக பொது நூலாக கருதப்படுகிறது. ஆனால், தொல்காப்பியம் தொடர்பான தனது நூல்களில் ச.வே.சுப்பிரமணியன் தொல்காப்பியத்தை உலகப் பொது நூல் என குறிப்பிட்டுள்ளார்.தொல்காப்பியரின் நோக்கம் மொழிக்கு இலக்கணம் வகுப்பது. திருக்குறளின் நோக்கம் மனித வாழ்வுக்கு இலக்கணம் வகுப்பது. எனவே, தொல்காப்பியம் தமிழின் தனி சிறப்புக்குரிய நூல் என்றே கருதப்படுகிறது.தொல்காப்பியத்துக்கு பல்வேறு காலங்களில் பல்வேறு அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். ஆனால், தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், கலாசாரங்கள், மேல்சாதி- கீழ்சாதி முறைகள், 4 வகை சாதி அமைப்புகள், மனு வர்ணாஸ்ரம முறைகள் குறித்த கருத்துகள் உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன.இந்த இடைச்செருகல்கள் களையப்பட்ட உரையை தொல்காப்பியத்துக்கு எழுத ச.வே.சுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்வர வேண்டும் என்றார் அன்பழகன்.ச.வே. சுப்பிரமணியன் பேசியது: நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் அந்த மொழியில் இலக்கண நூல் இல்லை. பெரும்பாலான மொழிகளுக்கு சம்ஸ்கிருதத்திலும், சில மொழிகளுக்கு ஆங்கிலத்திலும் இலக்கண நூல்கள் உள்ளன. சொந்த மொழியிலேயே இலக்கண நூல் பெற்ற சிறப்பு தமிழுக்கு மட்டுமே உள்ளது. தமிழ் செம்மொழியாக அறிவிக்க தொல்காப்பியமும் ஒரு சான்றாக உள்ளது.10 ஆயிரம் ஆண்டு இலக்கியங்கள் இருந்தால் மட்டுமே தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல் எழுத முடியும். ஏராளமான இலக்கியங்களை ஒலைச்சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாக பதிப்பித்த உ.வே. சாமிநாதய்யர் தொல்காப்பியத்தை மட்டும் பதிப்பிக்காமல் விட்டுவிட்டார் என்றார் சு.வே. சுப்பிரமணியன்.தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது சொக்கலிங்கம், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொற்கோ, மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன், மெய்யப்பன் பதிப்பக உரிமையாளர் ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், மேலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment