Friday 8 April 2011

போராசிரியரின் மதிநுட்பமும் பதில் சொல்லும் பாங்கும்

தனிநாடு கோரிக்கையைத்தான் கைவிட்டோமே தவிர அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன’’
பிரதமர் நேருவின் நெருக்கடி காரணமாக அன்று அண்ணா இப்படிச் சொன்னார்.

காலங்கள் ஓடிவிட்டாலும்… ‘‘தமிழருக்கு தனிநாடு அமைய வேண்டும் என்ற திருமாவளவனின் கனவு நனவாக வேண்டும்’’ என்று இப்போது ஆசியும் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார் தி.மு.க. பொதுச் செயலாளரும் நிதியமைச்சருமான பேராசிரியர் அன்பழகன். இந்த வாழ்த்தை மத்திய உளவுத்துறை அப்படியே மத்திய அரசுக்கு தெரிவித்துள்ள நிலையில், வரலாறு மீண்டும் திரும்புமா என்ற பரபரப்பு பற்றி கொண்டிருக்கிறது.
கலைஞரின் ‘வாக்கிங்’ நண்பரும், திட்டக் குழு துணைத் தலைவருமான நாகநாதன் எழுதிய, ‘இந்தியக் கூட்டாட்சியியல் & அதிகார குவிப்பா? பகிர்வா?’ என்ற புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 14-ம் தேதி சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடந்தது.
நிதியமைச்சர் அன்பழகன் புத்தகத்தை வெளியிட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
‘‘திருமாவளவன்தான் இந்த புத்தகத்தைப் பெற தகுதியானவர்’’ என்று தனது உரையில் குறிப்பிட்ட நாகநாதன், ‘‘இந்திய அரசியல் சாசனம் 106 முறை திருத்தியமைக்கப்பட்டதற்கு மத்திய அரசின் அதிகாரக் குவிப்புதான் காரணம்’’ என்று பேசிவிட்டு அமர்ந்தார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விடுதலை பேசும்போது, ‘‘இந்தியா தனி நாடே அல்ல. மௌரியர்கள் காலத்தில் இருந்து மன்மோகன் சிங் காலம் வரை பல அரசுகள், சமஸ்தானங்களின் ஒன்றுபட்ட வடிவமாகவே இந்தியா இருந்துள்ளது. அது தனி நாடாக இருந்ததில்லை’’ என்றார்.
புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட திருமாவளவன் பேச்சில் அனல்…
‘‘இந்தியா ஒரு நாடே இல்லை. அதிகாரத்தை நிலைநிறுத்தவும், மக்களைக் கட்டுப்படுத்தவும், வணிக நோக்கில் ஒன்றுபடுத்தவும் ஒட்டுமொத்த அரசு தேவை என்ற நோக்கில் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்தியா. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செயற்கை கட்டமைப்பு.
சமூக நீதிக் களமான தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த காரணத்தால், தமிழகத்தின் கோரிக்கைகள் தேசியக் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டன. தமிழகத்தை காங்கிரஸ் ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டிருந்தால் இந்நேரம் காவிரி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும். முல்லைப் பெரியாறு பிரச்னை தீர்ந்திருக்கும். தமிழகத்தில் என்ன செய்தாலும் திராவிடக் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும். நாம் ஆட்சிக்கு வர முடியாதபோது, தமிழக பிரச்னைகளுக்கும் வளர்ச்சிக்கும் நாம் ஏன் தீர்வுகாண வேண்டும்? என்று நினைக்கிறது காங்கிரஸ்.
இந்திய தேசியம், அதன் பாதுகாப்பு என்ற பெயரால் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் வருகின்றன. தேசிய இன உரிமைகளும், ஈழத் தமிழர்களும் நசுக்கப்பட்டது இந்தியாவின் அதிகார குவிப்பால்தான். தேசிய இன உரிமை, மாநில சுயாட்சி என்ற சொல்லாடல்களைத் தாண்டி இன்று நமக்குத் தேவையான சொல்லாடல் தமிழர் இறையாண்மை. இது தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை மட்டும் கொண்டிருக்கவில்லை. நமக்கான ஆட்சி, தேசிய இன உரிமை என்று நீண்டுகொண்டே செல்லும்.
சில லட்சம் மக்கள்தொகை கொண்ட இனங்களுக்கு பல தேசங்கள் உள்ளன. இஸ்லாம் மக்களுக்கு 26 நாடுகள், ரஷ்யாவில் சிதறுண்ட சிறு பகுதிகளெல்லாம் தனிநாடுகளாக அமைந்தன. குறைந்த மக்கள்தொகை கொண்ட அரேபியாவில் எத்தனை நாடுகள்?
ஆனால், உலகில் 10 கோடி மக்கள் தொகை கொண்ட மூத்த இனமான தமிழினத்துக்கு தனி நாடு இல்லை. ஆறரைக் கோடி மக்கள் இந்திய எல்லைக்குள் சிக்கியிருக்கிறார்கள். 3 கோடி மக்கள் 80 நாடுகளில் சிதறியிருக்கிறார்கள். பலநாடுகளில் அகதிகளாக இருக்கின்றனர்.

இந்த அவலத்தைப் போக்க ‘‘ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு ஒரு நாடு வேண்டும். அதுதான் தமிழ் ஈழம். அதை அடைகாப்பதும், முன்னெடுத்துச் செல்வதும் தமிழர்களின் கடமை. ஐ.நா.வில் தமிழன் கொடியும் பறந்தாக வேண்டும்’’ என்று ஆவேசமாக பேசிவிட்டு அமர்ந்தார் திருமாவளவன்.
அமைச்சர் அன்பழகனின் பேச்சில் ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் தி.மு.க. அவமானப்படுத்தப்பட்ட எதிரொலி தெரிந்தது.
‘‘தமிழ் இனம் தாழ்ந்து கிடக்கிறதே என்ற ஏக்கம் திருமா-வளவனிடம் தெரிகிறது. இந்த இனம் ஏற்றம் பெற வேண்டும் என்ற ஆழ்ந்த கவலையில் ஒரு நாடு வேண்டும் என்று கருதுகிறார். அது இறையாண்மை என்ற அளவில் உயர்வு பெற்றிருக்கிறது. இது அவரது கனவு. அதை மாற்றாமல் அவர் இருக்க வேண்டும். தமிழர்களுக்கு ஒரு நாடு இருக்கக் கூடாதா என்கிறார். அந்த ஆசை நிறைவேற அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அதிகாரக் குவிப்பால், கூட்டாட்சி இல்லாததால் இன்றைய நாடாளுமன்றத்தின் கதி என்னவாயிற்று என்று பார்த்தீர்களா? மத்திய அரசு என்று ஒன்று இருக்கலாம். அது ஆதிக்க அரசாக இருக்க கூடாது. மாநில அரசு அடிமை அரசாக இருக்க கூடாது.
பிரிவினை கூடாது என்பதல்ல என் வாதம். ஜனநாயகத்தைக் காப்பாற்றாமல் பிரிவினை என்பது ஏற்கக் கூடியதல்ல என்று அண்ணா கூறியதை திருமாவளவன் தெரிந்து கொள்ள வேண்டும். பிரிவினையை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பது திருமாவளவன் போன்றவர்கள் தனித்து தேர்தலில் போட்டியிட்டால் தெரியவரும்.
கடந்த காலங்களில் 100&க்கும் மேற்பட்ட முறை ஆட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று ஒரு மாநில அரசை, மத்திய அரசு கலைக்க முடியாது. எந்த மாநில அரசையும் கலைக்க முடியவே முடியாது. ஆனால் மாநில அரசு நினைத்தால், மத்திய அரசைக் கவிழ்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளின் பெருந்தன்மையால் இன்று மத்தியில் ஆட்சி நிலைக்கிறது’’ -என்றார் அன்பழகன்.
திட்டக் குழுத் துணைத் தலைவராக இருக்கும் நாகநாதன் மத்திய அரசின் அதிகாரத்துக்கு சவால் விடும் இந்த புத்தகத்தை எழுதி, இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் திருமாவளவனை பெற்றுக் கொள்ளச் செய்தது எதனால்? இதுதான் அரசியல் அரங்கின் இப்போதைய கேள்வி!
நன்றி: தமிழக அரசியல்

No comments:

Post a Comment