அறிஞர் அண்ணாவுக்கும் நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகனுக்குமான நெருக்கம் என்பது தலைமுறைகளைக் கடந்த ஒன்று. பேராசிரியர் அன்பழகனின் தந்தையார் கலியாணசுந்தரம் நீதிக்கட்சி முன்னோடிகளில் ஒருவர். சிதம்பரம் பகுதியில் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கு அவர் ஒரு முக்கியக் காரணகர்த்தா. அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையின் வளர்ச்சிக்காக சிதம்பரம் பகுதியில் "சந்திரோதயம்' நாடகத்தை நடத்தி நிதி சேகரித்துக் கொடுத்தவர்.1940களிலிருந்தே அண்ணாவுடன் நெருங்கிய தொடர்புடைய பேராசிரியர் அன்பழகன், தனக்கும் தனது தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட சுவாரஸ்யமான சந்திப்புகளை, அனுபவங்களை, நிகழ்வுகளைப் பல்வேறு கட்டுரைகள் மூலம் பதிவு செய்திருக்கிறார். அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் என்று பேராசிரியர் அன்பழகனின் பதிவுகளைத் தொகுத்து "மாமனிதர் அண்ணா' என்ற பெயரில் புத்தக வடிவமாக்கி இருக்கிறார்கள்.1937-ஆம் ஆண்டு மயிலாடுதுறை நகரப் பூங்காவில் இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு வந்திருந்த அண்ணாவின் பேச்சை 9-ஆம் வகுப்பு மாணவனாக அன்பழகன் கேட்டது -1942-ஆம் ஆண்டு சிதம்பரத்துக்கு அருகிலுள்ள வெள்ளியக்குடியில் நடந்த இயக்கத் தோழர் முருகேசன் என்பவரின் திருமணத்துக்கு ரயிலில் வந்த அண்ணா, பயணக் களைப்பில் தூங்கி மயிலாடுதுறையில்போய் இறங்கி, தாமதமாகத் திருமணத்துக்கு வந்ததும், அண்ணாவுக்காக மணமகன் இரண்டாவது முறை தாலி கட்டித் திருமணம் செய்துகொண்டது பற்றிய பதிவு -1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கு முன்பு, தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாவுக்கு இருந்த தயக்கம், ""அண்ணா, தங்களை அல்லவா இந்த நாட்டில் உள்ள இளைஞர்கள் எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? இலட்சக்கணக்கான இளைஞர்கள் தந்தை பெரியார் அவர்களை மதித்துப் போற்றினாலும், வாழ்த்தி முழங்கினாலும், அவர்கள் எல்லோரும் இயக்கத்தின் இலட்சிய வெற்றிக்கு வழிகாட்டத் தங்களையல்லவா நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? அந்த இளைஞர்கள் செயல்படுவதற்கு, வழிகாட்ட ஓர் அமைப்பு, அரசியல் இயக்கம் தேவையில்லையா?'' என்று அண்ணாவின் அன்புத் தம்பி அன்பழகன் எழுப்பிய வினாவும், அதற்கு அண்ணா அளித்த பதிலும் -இப்படி வரிக்கு வரி, பக்கத்துக்குப் பக்கம், கட்டுரைக்குக் கட்டுரை சுவாரஸ்யமாகவும் பல புதிய செய்திகளைத் தாங்கியதாகவும் அமைந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.பேராசிரியர் அன்பழகன் தனது சுயசரிதையையோ அல்லது தனது நினைவுக் குறிப்பையோ ஒரு தொடராக எழுதாமல் இருப்பது என்ன நியாயம்? சுயமரியாதை இயக்கம், திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த இயக்கங்களின் முன்னோடிகள், சுதந்திர இந்தியாவின் தலைவர்கள், நிகழ்வுகள் என்று கடந்த முக்கால் நூற்றாண்டு கால இந்திய சரித்திரத்துக்கே நேர்சாட்சியாக, ஆட்சி மையத்தின் பார்வையாளராக இருந்தவர் என்கிற முறையில், தனக்குத் தெரிந்த உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டிய கடமை நிதியமைச்சர் அன்பழகனுக்கு உண்டுதானே? அவர் ஏன் அந்தக் கடமையைத் தவிர்க்கிறார் என்கிற தார்மிகக் கோபம் இந்தத் தொகுப்பைப் படித்தவுடன் அவர்மீது எழுகிறது.சட்டப் பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்த அனுபவமும், பல ஆண்டுகள் அமைச்சராகவும், திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த அனுபவமும், எல்லோருக்கும் வாய்த்துவிடுமா என்ன? "மாமனிதர் அண்ணா'வைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகன் தனது அனுபவங்களை ஓர் ஆவணப் பதிவு செய்தே தீர வேண்டும். தமிழ்ச் சமுதாயத்தின் சார்பில் அடியேன் முன்வைக்கும் வேண்டுகோள் இது!
நன்றி-கலாரசிகன் இதழ்
(பேராசிரியர் அன்பழகனார் தமிழ் உணர்வு மிக்கக் கவிஞரும் நாவன்மை மிக்கப் பொழிவாளரும் ஆவார். வாழ்க்கை வரலாற்றை மனச் சான்றின்படி எழுதினால் சில குழப்பங்கள் நேரலாம் அல்லது மறைத்து எழுத விரும்பாமை போன்றவற்றால் எழுதாமல் இருக்கலாம். ஆனால். தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இடம் கொண்ட பேராசிரியர் அவர்கள் பின்னர் வெளியிடும் நோகிகலாவது தன் வரலாற்றுத் தொகுப்பை எழுத வேண்டும். கலாரசிகன் வேண்டுகோளைத் தனிப்பட்ட வேண்டுகோளாக் கருதாமல் தமிழ் உலக வேண்டுகோளாகக் கருதி நிறைவேற்ற வேண்டும்.
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் )
பேராசிரியார் வாழ்க்கை வரலாறு ஒரு பாடமாக இருக்கும். திராவிடன் என்று சொல்வதில் பெருமை.
ReplyDeleteஜி.ராஜமோகன்
Perasiriyar,s life is a model for the youth
ReplyDeleteDr G Rajamohan